Tuesday, July 17, 2018


01/07/2018

கடமைகள் நம்மை வழி நடத்தட்டும்

டெலிகாம் எடிட்டோரியல் :


தொலைத்தொடர்பு தொழிற்சங்க இயக்கம் இன்று வரலாற்று சந்திப்பில் நிற்கிறது. தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. DPE விதித்துள்ள சாத்தியப்பாடு நிபந்தனைகளை முறியடித்து ஊதிய மாற்றம் காணல், புதிய டிஜிடல் கொள்கையில் பொதுத்துறைக்கான முக்கியத்துவத்தை மீண்டும் ஏற்படுத்துதல், கட்டவிழ்த்தல் கொள்கையில் நம்முடைய செல்வாதாரங்கள் கொள்ளை போகாமல் தடுத்தல், கோபுரங்கங்கள் மூலமான வணிகத்தை நம்மிடமே தக்கவைத்தல், ஏப்ரல் 2018 ல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற அனைத்து பொதுத்துறை தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அபாயகரமான கொள்கை முடிவுகள் என முக்கியமான பல பிரச்சனைகள். இவற்றை எதிர்கொண்டு நமது நலன்களை முன்னெடுத்துச் செல்ல பிரச்சனைகளை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
நம்முடைய போராட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர், செயலாளருடன் விவாதித்த பிறகு, ஊதிய மாற்றப்பிரச்சனையில் – சாத்தியப்பாடு நிபந்தனைகளில் தேவையான அமைச்சரவை விதிவிலக்குப் பெற்று ஊதியமாற்றத்தை அனுமதிப்பதில் – DOT முதலிய சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அழுத்தமான கவனத்தை நம்மால் ஈர்க்க முடிந்துள்ளது. ஏப்ரல் 8 கடிதம் மூலம் DOT க்கு DPE விளக்கம் அனுப்பிவிட்டது. செயலர்கள் குழுவின் பரிந்துரைகளின்படி சாத்தியப்பாடு நிபந்தனை பாரா 5 ன் கீழ் BSNL வரவில்லை. எனவே DOTயே இந்தப் பிரச்சனையைப் பரிசீலித்து விதிவிலக்குப் பெற அமைச்சரவையை அணுக முடியும். ஊதிய மாற்றம் குறித்த வழிகாட்டுதல்களில் பெரிய அளவில் கொள்கை விலகல் எதுவும் இருக்க முடியாதே தவிர, சிறிய அளவில் விதிவிலக்குகள் சாத்தியமே என செயலர்கள் கூட்டத்தில் தனது கருத்தாக அமைச்சரவைச் செயலாளர் கூறியுள்ளதாக அறிகிறோம். ஆனால் எது சிறிய நிபந்தனைத் தளர்வு, எது பெரிய கொள்கை மாற்றம் என யாருக்கும் தெரியாது. ஆனாலும் நாம் நம்புவோம், BSNLல் நாம் கோருவது சிறிய விதிவிலக்குத்தான். 
ஊழியர்களுக்கான 8 வது சுற்றுப்பேச்சு வார்த்தை வழிகாட்டுதல்களில் நிபந்தனை தளர்வு வேண்டி நமது NFTE சங்கம் கோரியபோதும், DPE தனது ஜனவரி 31 கடிதத்தில் இதேபோன்ற முடிவைத்தான் பதிலாகத் தந்தது. BSNL ஊதிய மாற்றப்பிரச்சனையோடு தனது பிரச்சனையையும் DOT சேர்த்தே பரிசீலிக்க வேண்டும் என MTNL கோரியுள்ளது. MTNL -ல் நிலைமையாதெனில், நம்மைப்போன்று ஜூன் 2013-லிருந்து 78.2 வழங்கப்படாமல், 73.8 IDA மட்டுமே ஊதிய நிர்ணயமாக அதுவும் ஜனவரி 2018 லிருந்து பெற்றுவருகிறார்கள். 
சென்றமுறை 2007ல் அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் மூன்று அம்சங்களில் உதவியது. ஒன்று அவர்களுக்கான ஊதியமாற்றம், இரண்டு ஊழியர்களுக்கும் அதேபோன்ற ஊதிய நிர்ணய பொருத்தலின் பலன், மூன்று, பென்ஷன் மாற்றமும் அதே பார்முலாவின் அடிப்படையில் அமலாகியது. இம்முறையும் அதிகாரிகள் போன்று 15 சதவீத ஊதியமாற்றம் ஊழியர்களும் கோருவதால் அதிகாரிகள் சங்கங்களோடு இணைந்து இயக்கம் காண முடியும். ஊழியர்களுக்கான 8வது சுற்று பேச்சுவார்த்தையைத் துவக்க DOT 27-04-2018 கடிதத்தில் தாமதமாகவேனும் BSNLக்குக் கூறியுள்ளது; அதில் நவம்பர் 24, 2017 DPE வழிகாட்டுதல்களைக் கறாராக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இனி BSNL, ஏனைய பொதுத்துறை நிறுவனங்களைப்போல இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவை [ bilateral wage negotiation committee (BWNC)] அமைக்க வேண்டும். அதாவது, குழுவிற்கான நிர்வாகத்தரப்பு உறுப்பினர்கள், ஊழியர் தரப்பு உறுப்பினர்களையும் நியமிப்பது மட்டுமல்ல, குழுவிற்குத் தலைவராக CMDயே – பிற பொதுத்துறை நிறுவனங்களைப் போல -- தலைமை தாங்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம், தேசிய கூட்டாலோசனைக்குழு போல இயக்குநர் (மனிதவளம்) தலைமையேற்க வேண்டும். 
இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானமான கடமை 25,000 ஊழியர்களின் தற்போதைய ஊதிய தேக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும். (இது இரண்டு மூன்று ஆண்டுகளில் 40ஆயிரத்தைத் தாண்டக் கூடும். ஒன்னரை லட்சம் ஊழியர்களில் பெரும்பகுதியினர் ஊதியத் தேக்கம் என்பது மிக மோசமான நிலைமையாகும். எனவே ஊதியவிகிதத் தேக்கத்தை உடைத்தல் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது) எனவே அதற்கேற்ற வகையில் ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதத்தை – எதிர்காலத்தில் எந்த ஊழியரும் ஊதியத் தேக்கமடையாது தவிர்க்கும் வகையில் -- வடிவமைத்திடல் வேண்டும். இதற்கு நாம் கடுமையாக சில முன்தயாரிப்புகளை, கணக்கீட்டு தரவுகளைத் திரட்ட வேண்டும். நிர்வாகம் சங்கம்சாராத உறுப்பினர்களைக் குழுவில் சேர்க்க மறுக்குமானால், தேவையெனில், ஊழியர் தரப்பு குழு உறுப்பினர்களுக்கு உதவியாக அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நமக்குள்ளேயான உள்ளரங்கு ஆய்வுக்குழுவையும் அமைக்கலாம். மேம்பட்ட புதிய ஊதிய விகிதங்களை முடிவு செய்யும்போது BSNLஓய்வூதிய பங்களிப்பு பிரச்சனையையும் நாம் சேர்த்தே தீர்க்க வேண்டும். 
டிஜிடல் தொழில்நுட்பப் புதிய கொள்கைவரைவில், ’திட்டத்தில் பொதுத்துறையின் கேந்திரமான பாத்திரத்தின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையைத் திட்ட வரைவாளர்களிடம், முன்பே BSNL வலியுறுத்திவிட்டது. ஆனாலும், துரதிருஷ்டவசமாக கொள்கை திட்ட வரைவு அறிக்கையில் பொதுத்துறையின் பங்கு உரிய பாராட்டைப் பெறவில்லை. புதிய தொலைத்தொடர்பு திட்டம் 2011-ன் இலக்கான பிராட்பேண்டு விரிவாக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி நிறைவேற்றிய BSNLக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுகுறித்து புதிய டிஜிடல் கொள்கை மௌனம் சாதிக்கிறது. அதே போல பொலிவுறு நகரமயமாக்கல் திட்டத்தில் உயர்நுட்பத் தொலைத்தொடர்புத் திட்டப்பணிகள் அனைத்தும் BSNLக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட வேண்டும். அனைத்து அரசுசார்ந்த நிறுவனங்களும் அமைப்புகளும் பொதுத்துறையான BSNL சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டு அமலாக்கப்பட வேண்டும். புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் அனைவருக்கும் உயர்தொழில்நுட்ப டிஜிடல் சேவையும் அதன் பலன்களும் கிடைக்க வேண்டும் என்பது திட்டத்தின் உயரிய நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் - உரியவர்களுக்கு பலன்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டுமானால் -- அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNLமூலம் திட்டம் நிறைவேற்றப் பட்டால் மட்டுமே சாத்தியம் ; மேலும் அதை அரசால் கண்காணிக்கவும் முடியும். பொதுத்துறை வசமிருக்கும் திறன்மிகு தொழிலாளர்களின் தொழில்நுட்ப அறிவாற்றல் மேலும் ஊக்கிவிக்கப்படுவதன் மூலமே பொதுத்துறையின் சந்தை வாய்ப்பை விரிவுபடுத்த முடியும். BSNLன் வளர்ச்சிக்கு 4G / 5G அலைக்கற்றைக் அடிப்படைக் கட்டுமானவசதியை ஒரு தொழில்நுட்ப முதலீடாக BSNLக்கு வழங்குவது மிகமிக முக்கியமானது. 
அடுத்த பிரச்சனையும் புதியதான தாக்குதலும் ’தொலைநோக்குத் திட்டம் 2022’ (Vision 2022). அரசின் கொள்கை அதிரடி. அதன் கூட்டம் அனைத்து நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் CMDs கலந்துகொள்ள ஏப்ரல் 9-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை மறுவடிவமைப்புச் செய்ய, பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய, பல முடிவுகளை, முன்மொழிவுகளை எடுத்துள்ளது. மேலும் ஒவ்வொரு நிறுவனத் தலைமை நிர்வாகியும் தங்கள் பகுதியில் அதனைச் செயல்படுத்துவதற்கான ஆய்வு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் எதிர்வினையாற்றி அளிக்கக் கோரப்பட்டிருக்கிறார்கள். தொலைத்தொடர்பு உட்பட 6 பிரிவுகள் நட்டம் ஏற்படுத்தும் பிரிவுகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. 
முக்கியமான மற்றொரு முடிவு முன்னுரிமை இல்லாத பிரிவுகளிலிருந்து அரசு விலகிவிடுவது என்பது. ஆனால் 14-வது நிதிக் கமிஷன்படி BSNL முன்னுரிமை பிரிவில் வருகிறது. 15 வது நிதிக்கமிஷனும் அமைக்கப்பட்டு விட்டது. அதன் அறிக்கை 2019 இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறியுள்ள தொழில்நுட்பச்சூழலில், தொலைத்தொடர்பை ’உயர்முன்னுரிமைப் பிரிவு’ என வகைப்படுத்து- வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில், தொலைத்தொடர்பு அடிப்படைக் கட்டுமானப் பிரிவு என்பது, இரயில்வே, சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்துக்கு இணையானதாக வைக்கப்பட்டுள்ளது. 
’தொலைநோக்குத் திட்டம் 2022’ நிரந்தர ஊழியர்களுக்குப் பதில், வெளியிலிருந்து பணியை பெறுவது என்ற அவுட் சோர்சிங்கை ஆதரிக்கிறது. அது மட்டுமல்ல, உயர் படிப்புக்காகவோ, திறன்மேம்பாட்டுக்காகவோ ஏதோ ஒரு காரணத்தில் ஊழியர்கள் நீண்ட விடுமுறையில் செல்லவும் அனுமதிக்கத் தயாராக உள்ளது. (பணிபாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும்) FR 56-J சட்டப்பிரிவைத் தாராளமாகப் பயன்படுத்துவது குறித்தும் தீவிரமான பரிசீலனையில் கொண்டுள்ளது விஷன் ஆவணம்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம், இந்த நாடு சுதந்திர ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்று இருந்தாலும், ஊழியர்களின் பதவி உயர்வு விஷயத்தில் சோஷலிசத்தை – சமூக சமத்தன்மையை – இனியும் கடைபிடிக்க வேண்டாம்; அதற்கு மாறாக, திறமையாகப் பணியாற்றக்கூடிய ’நட்சத்திர’ ஊழியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு பெறுகின்ற வகையில் ஒரு புதிய ’பசுமைவழிச் சாலையை’ அவர்களுக்காக ஏற்படுத்தலாம் என்பதும் சிபார்சுகளில் ஒன்று. 
பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் அனைத்தும் ’தொலைநோக்குத் திட்டம் 2022’ முடிவுகள் குறித்து ஆராயவும், திட்டம் நம்மீது ஏற்படுத்த உள்ள தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துப் பொருத்தமான இயக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என நாம் நம்புகிறோம். 
டவர் கார்பரேஷன் பிரச்சனை தற்போது நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கிறது. நல்ல தீர்ப்பு வருமென்று நம்புவோம். டெல்லியில் நடைபெற்ற நமது மாநிலச் செயலர்களின் கூட்டத்தில் நமது அமைப்பை வலிமைபெறச் செய்வது, கட்டுக்கோப்பை மேம்படுத்துவது நமது கடமை என்பது எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அந்தக் கடமையைத் தலமட்டத்தில் செவ்வனே செய்வோம்! இயக்கம் எஃகுறுதி பெறட்டும்! பிரச்சனைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்வோம்! நம் இயக்கம், நம் நிறுவனத்தின் நலத்தையும் அதன் குடும்ப உறுப்பினர் அனைவரின் நலனையும் முன்னோக்கிச் செலுத்தட்டும்! சரித்திரக் கடமைகள் நம்மை வழிநடத்தட்டும்!

No comments:

Post a Comment