Saturday, January 26, 2019

ஊதிய மாற்றம்:
நிபந்தனைகளில் தளர்வு / சலுகை பெறுவதில் உள்ள பிரச்சனை
Pattabi Raman
---தோழர் ஆர். பட்டாபிராமன் மேனாள் மாநிலச் செயலர்

தமிழாக்கம் வெ. நீலகண்டன், கடலூர்,

 (தனது வலைப்பூ பக்கத்தில் ஊதிய மாற்றம் குறித்த விரிவான கட்டுரை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் தோழர் பட்டாபி. அதன் சுருக்கமான தமிழாக்கம் தோழர்களின் சிந்தனைப் பகிர்விற்காக. வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்திற்கான ஆவணங்களின் தொகுப்பு – கூடுதல் விவரம் தந்தால் நன்றி உடையவனாவேன் என்கிறார்;  -தோழர் பட்டாபி ).
    ஊதிய மாற்றப் பயணம் மூன்று வழித் தடத்தில் நடக்கிறது. ஒன்று, அதிகாரிகளும் ஊழியர்களும் AUABயாக இணைந்து போராடுவது – அதிகாரிகளுக்கான 3-வது ஊதியமாற்றக் குழு விதித்த அஃபர்டபிலிடி நிபந்தனை அம்சத்தில் விலக்கு கோரிப்பெறுவது.  இரண்டாவது, ஊழியர்கள் தங்களுக்கான இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய மாற்ற அமலாக்கத்திற்குத் தேவையான உடன்பாட்டை நிர்வாகத்துடன் மேற்கொள்வது. மூன்றாவது, அனைத்துப் பொதுத்துறை மத்திய சங்கங்களும் அஃபர்டபிலிடி நிபந்தனையை எதிர்த்துப் போராடுவது மற்றும் நிபந்தனையை நீக்க முயற்சிப்பது.
    சென்ற2007 அதிகாரிகளுக்கான ஊதியமாற்றம் மூன்று பலன்களைத் தந்தது. ஒன்று அதிகாரிகளுக்கு ஊதியமாற்றம்; இரண்டு ஊழியர்களுக்கும் அதிகாரிகள் பெற்ற அதே பிட்மெண்ட் பலன் ;  மூன்றாவது அதே பார்முலாவில் பென்ஷன் மாற்றம்.
    இம்முறையும் சங்கங்கள், அதிகாரிகளுக்கு 3-வது ஊதியமாற்றக்குழு பரிந்துரைத்த 15% பிட்மெண்டையே கோரி, அதிகாரிகளுடன் இணைந்து போராடுகின்றனர். ஆனால் DOTயோ ஊழியர்களுக்கான 8வது சுற்று பேச்சுவார்த்தையை (DPE 2017கொள்கை குறிப்புகளைப் பின்பற்றி நடத்த) வழிகாட்டுதல்களை மிகத் தாமதமாகத் தந்தது.
    நட்டமடையும் நிறுவனங்களில் (1-1-2017முதல் 15% பிட்மெண்டுடன்) ஊதியமாற்றம் பெற்றுவிட வேண்டுமென்ற கடும்முயற்சி BSNLல் AUAB மேற்கொள்கிறது. DOTஐ பேச்சுநடத்த வைத்ததில் முன்னேற்றம் கண்டதுபோல, விரும்பிய முடிவோடு ஊதியமாற்றம் காண்பது, தாமதம் தவிர்க்க அதையும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படுமுன் இந்த அரசுடன் முடிப்பதென்பது இலக்கு.
    மத்திய பொதுதுறை நிறுவனச் சங்கங்கள் அஃபர்டபிலிடி நிபந்தனைகளைத் திரும்பப்பெறக் கோருவது மட்டுமல்ல, BSNLசங்கங்கள் இதற்கெனத் தனியாகப் போராட வேண்டாம் எனவும் (ஹைத்ராபாத் தீர்மானம்) யோசனை கூறுகின்றன. நாம் நிபந்தனைத் தளர்வு /சலுகை கேட்பதும்கூட (எலிப்) பொறியில் மாட்டுவதாகக் கூடுமென குரல்கள் கேட்கின்றன. அஃபர்டபிலிடியை நீக்க பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவை? 3வது ஊதியமாற்றக்குழு முன் அவர்கள் அளித்த மனுவில் நட்டமடையும் பிரிவுகளுக்கும் ஊதியமாற்றம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏன் சேர்க்கவில்லை?  மத்திய சங்கங்கள் இந்தக் கேள்விகளை புறக்கணிக்க முடியாது.  மனு அளித்த போதுதான் இல்லை, ஊதியக்குழு அறிக்கை வெளிவந்த பிறகாவது பிரதமர் அலுவலகம், நிதி, கனரகத்தொழில் அமைச்சர்கள் அல்லது DPE யிடம் கூட்டாக இந்தப் பிரச்சனைகளை எழுப்பி இருக்கலாம் அல்லவா?
    வருடாந்திர பொதுவேலைநிறுத்தங்கள் ஆளும் அரசை அம்பலப்படுத்தியதே தவிர, பிரச்சனைத் தீர்வுக்கு முயற்சிக்கவில்லையே. ’ஊதியமாற்றம் எங்கள் உரிமை’முழக்கத்தில் தவறில்லை, எல்லோருக்கும் உரிமை உண்டு.  ஆனால் அந்த உரிமை நனவாகிடத் தொடர் இயக்கமும், சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்கும் வகையில் திறன்மிக்க விவாதங்களும் தேவையான நேரங்களில் சரியான போராட்டங்களும் சேர்ந்த கலவையல்லவா வேண்டப்படுவது.
 ஊதியக்குழுக்களும் ஏற்பட்ட மாறுதல்களும்
அஃபர்டபிலிடி நிபந்தனை அம்சம் ராவ் குழுவால் (2-வது ஊதியமாற்றக் குழு) புகுத்தப்பட்டது. 3-வது குழுவான சதீஷ்சந்திரா குழுவால் மேலும் சிக்கலாக்கப்பட்டது. முதலாவதான மோகன் கமிட்டியில் அஃபர்டபிலிடி நிபந்தனை இல்லை, ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு லாபம் என்பது வலியுறுத்தியிருந்தாலும், நட்டமடையும் நிறுவனங்களிலும் கூட ஊதிய மாற்றம் செய்ய வழிவகையும் சொல்லப்பட்டிருந்தது.
    இதற்கு முந்தைய வழிகாட்டுதல்களில் இந்தக் கடுமையான அம்சம் இல்லை, அந்தக் காலங்களில் லாபமில்லாத நிறுவனத்தில்கூட, வருவாய்க்கு வழிவகை இருப்பின் ஊதியப் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டன.  1990க்கு முன்பு தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்குமிடையே ஏற்படும் ஒப்பந்தம் அமைச்சகத்துக்கோ அன்றி DPE-கோ ஒப்புதலுக்காகவோ அனுப்பிடத் தேவையில்லை என்பது மற்றொரு சாதகமான அம்சம்.
1999 DPE வழிகாட்டுதல் : IDA உடனான புதிய ஊதியவிகித மாற்றங்களின் ஒப்புதலுக்கும் அமலாக்கத்திற்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிமுறை வருமாறு : “6(a) 1996- 97, 1997-98 மற்றும் 1998-99 ஆகிய தொடர்ச்சியான மூன்று ஆண்டுகள் லாபம் ஈட்டியிருந்தால், போர்டு லெவலுக்குக் கீழுள்ள அதிகாரிகளுக்கு இந்த வழிகாட்டுதல்களின்படி புதிய ஊதிய விகிதத்திற்கு மாற அனுமதிக்கலாம் “
(b) மேற்கண்ட மூன்று நிதியாண்டுகளில் லாபம் ஈட்டாது ஏதாவதொரு ஆண்டில் நட்டம் அடைந்திருந்தாலும் அதிகாரிகளுக்குப் புதிய ஊதிய விகிதத்தை அரசின் அனுமதி பெற்று அதாவது சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது நிர்வாக அமைச்சகத்தின் ஒப்புதலோடு அமலாக்கலாம்.  இந்த ஒப்புதலைப் பெற, அந்த நிறுவனம் புதிய ஊதிய உயர்வு செலவுக்கான நிதி ஆதாரத்தை எப்படி திரட்டும் என்பதற்கான திட்ட அறிக்கையை வழங்க வேண்டும் (DPE உத்தரவு தேதி 25-6-99)
1992 DPE வழிகாட்டுதல் : 1992ல் ஊதிய மாற்றக்குழு இல்லை. ஆனாலும் இதே அம்சங்களோடு DPEவழிகாட்டுதல் வழங்கியதைக் காணமுடியும். “1992 ஊதிய மாற்றம்: IDA உடனான புதிய ஊதியவிகித மாற்றங்களின் ஒப்புதலுக்கும் அமலாக்கத்திற்கும் பொதுத்துறைநிறுவனங்களுக்கான வழிமுறை வருமாறு : லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், நட்டமடைவன, BIFR க்கு முந்தைய பொதுத்துறை நிறுவனங்கள் என மூன்று பிரிவுகள்.
1991- 92, 1992-93 மற்றும் 1993-94 என மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வரும் நிறுவனங்கள்: கீழே இணைப்பு 1ல் கண்டவாறு போர்டு லெவலுக்கு கீழுள்ள பொதுத்துறை அதிகாரிகளுக்குப் புதிய ஊதிய விகித மாற்றத்தை அனுமதிக்கலாம்.
மேற்கண்ட மூன்று நிதியாண்டுகளில் லாபம் ஈட்டாது ஏதாவதொரு ஆண்டில் நட்டம் அடைந்திருந்தாலும் அதிகாரிகளுக்குப் புதிய ஊதிய விகிதத்தை, அதற்காகும் செலவை ஈடுகட்டும் வருவாய் எஸ்டிமேட் கணக்கீடளித்து,  அரசின் அனுமதி  பெற்று அமலாக்கலாம்.
2வது ஊதிய மாற்றக் குழு: இது ராவ் கமிட்டி. பரிந்துரைகளில் DPE வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன.  நிறுவனத்தின் வரிகட்டுவதற்கு முந்தைய லாபம் (PBT)என்ற அம்சம் அஃபர்டபிலிடியுடன் சேர்க்கப்பட்டது. மேலும் ஊதிய உயர்வின் செலவு PBT ன் 20 சதத்திற்குள் இருந்திட வற்புறுத்தப்பட்டது. செலவு 20% ஐ தாண்டினால் பிட்மெண்ட் சதவீதம் குறைத்து அமலாக்கிட அனுமதிக்கப்பட்டது. முக்கியமான மாறுதல் நட்டமடையும் நிறுவனங்களுக்கு தளர்வு ஏதும் அளிக்கப்படவில்லை.
    5 ஆண்டுகள் காலமுறையுள்ள ஊழியர்கள் தங்களுக்கு 2012 முதல் அமலாகிட வேண்டிய ஊதியமாற்றம் கோரியபோது 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான இரண்டாம் பகுதி வழிகாட்டுதல் 2013ல் வெளியிடப்பட்டது. அதில் மேற்கண்ட எல்லை வரையறுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் அஃபர்டபிலிடி நிபந்தனை முதன்முறையாக ஊழியருக்கான வழிகாட்டுதல்களில் புகுத்தப்பட்டது.
    வருவாய்க்கான ஆதாரவளம் அல்லது லாபம் என்ற முந்தைய அம்சங்கள் அஃபர்டபிலிடி மற்றும் நிதிநிலைத்தன்மை என்பதாக மாற்றப்பட்டன.
3வது ஊதியமாற்றக் குழு : இது சதீஷ் சந்திரா கமிட்டி. லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் 15% உயர்வு பரிந்துரைத்தது.  ஊதியஉயர்வால் நிதிநிலைமையில் ஏற்படும் தாக்கத்தை PBT நிபந்தனையுடன் இணைத்தது. 2-வது ராவ் கமிட்டி போல அஃபர்டபிலிடி அம்சத்தை ஓராண்டிற்கு மட்டுமல்லாமல் முந்தைய மூன்று ஆண்டுகளுக்கும் PBT அம்சத்தோடு 3வதுகுழு இணைத்தது.  மேலும், முழுமையான 15சதவீத உயர்வு கணக்கீட்டை நிதிச்சுமை தாக்கத்தோடு இணைத்தது மட்டுமல்ல, நிதிச்சுமை அம்சத்தை 20 சதவீத PBT வரையறைக்குள்ளும் கட்டுப்படுத்தியுள்ளது  சதீஷ்சந்திரா குழு.
    ஓர் உதாரணம் : ஒரு நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் 1000 கோடி. இதில் 20% என்பது 200 கோடி. ஊதியமாற்ற உயர்வால் ஏற்படும் மொத்த செலவும் 200 கோடிக்குள்தான் இருக்க வேண்டும். மாறாக, முழுமையாக 15% வழங்குவதால் செலவு 200 கோடியைத் தாண்டுமானால், அப்போது ஊதிய உயர்வின் சதவீதத்தைதான் 10 அல்லது 5 அல்லது ஏதுமில்லை 0 எனக் குறைத்து, எப்படியும் செலவை 200 கோடிக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகு வேறு பலன் ஏதுமில்லை.
அதிகாரிகளுக்கான 3வதுகுழுவின் அஃபர்டபிலிடி குறித்து மேலே உள்ள நிபந்தனைகளையே DPE 3-8-2017ல் வெளியிட்ட உத்தரவில் சுட்டிக்காட்டியது.  ஊதியமாற்ற அமலாக்க ஆண்டின் முந்தைய மூன்று ஆண்டுகளின் PBT சராசரியில் 20 சதத்திற்கு உட்பட்டதாக இருந்தால் முழுமையான பிட்மெண்ட் 15 சதவீதம்.
1-1-17 முதல் அமலாக வேண்டிய ஊழியருக்கான ஊதிய மாற்றத்தின் 8வது சுற்று பேச்சுவார்த்தைக்கான கொள்கைகள்:
 2.1 பொதுவாக 31-12-2016 ல் முடியும் 5ஆண்டு அல்லது 10 ஆண்டு காலவரையறைத் திட்டமுள்ள ஊழியர்களுக்கான ஊதியமாற்றப் பிரச்சனை குறித்து நிர்வாகம் தாரளமாக பேசலாம். நிபந்தனை யாதெனில், நிறுவனத்தின் கட்டுப்படியாகக் கூடிய திறன் அதாவது அஃபர்டபிலிடி, மற்றும் நிறுவன நிதி நிலைமையின் நிலைத்தன்மை தொடர் பேணல் முதலியவற்றை ஊதியமாற்ற இரதரப்பு விவாதத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.
III இதுவரை எடுக்கப்பட்ட தளர்வு முடிவுகள்
1.  DPE உத்தரவு ஆகஸ்ட் 2011 கனரகத் தொழில் அமைச்சகம் பாரா 3 பின்வருமாறு:
           “3. 1987 அல்லது 1992 ஆண்டு ஊதியவிகிதத்தில் இருக்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் 1997 ஊதியவிகிதத்திற்குக் கொண்டுவரப்படவேண்டுமென DPE கருதுகிறது. அத்தகைய நிறுவனங்கள் நலிவடைந்து நட்டத்தில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் 1997 ஊதியவிகிதத்திற்கு மாற்றப் பரிசீலிக்க வேண்டும்; அஃபர்டபிலிடி அடிப்படையிலும் தேவையெனில், இதற்கென பட்ஜெட் நிதி ஒதுக்கீடு கோரியும் செய்யலாம்.
    16 -9-2015 மத்திய அமைச்சரவை முடிவின்படி மேம்படுத்தப்பட்ட விருப்ப ஓய்வுத் திட்டம் அக்டோபர்13 முதல் மூன்று மாதங்களுக்கு அமலாக்கப்பட்டது. சேவை இறுதிப் பலன்களை அதிகரிக்க வேண்டி, ஐடிஏ-வுடன் இணைந்த 2007 ஊதிய விகிதத்திற்கு ஊதியத்தை உத்தேசமாக (நோஷனலாக) உயர்த்திக் கணக்கிட்டு விஆர்எஸ் அமல்படுத்துவதே நோக்கம். “
2. இந்துஸ்தான் போட்டோ பிலிம் கம்பெனி ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வுத் தொகுப்பு திட்டம் (பத்திரிக்கை பிரசுரம் 28-2-2014): பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒருமுறைச் சலுகையாகத் திட்டமில்லா பட்ஜெட் ஆதரவாக ரூ 181 கோடியே 54 லட்சம் அனுமதிக்கிறது. இந்த அனுமதி, DPE வழிகாட்டுதல்படி தமிழ்நாடு உதகமண்டலத்தில் உள்ள மேற்படி நிறுவன ஊழியர்களின் ஊதியத்தை உத்தேசமாக 2007 ஊதிய விகிதத்திற்கு உயர்த்தி (கூடுதல் இறுதி பணப்பலனோடு) விருப்பஓய்வுத் திட்டத்தை அமல்படுத்த வழங்கப்பட்டது.
    இது கனரகத் தொழில் அமைச்சகத்தின் கீழ் (நட்டத்தில்) இயங்கிய மத்திய பொதுத்துறை நிறுவனம். 1987 ஊதிய விகிதத்தில் இருந்த ஊழியர்கள் விலைவாசி உயர்வால் வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமப்பட்டனர்.  அவர்களின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, விஆர்எஸ்-திட்டத்தின் கீழ் கூடுதல் பணப்பலன் கிடைத்திட மேற்கண்ட முடிவு. இதனால் ஊழியர்களின் உடனடி நெருக்கடி தீர்ந்தது. கூடுதல் விஆர்எஸ், ஓய்வுக்கு பிறகான மறுவாழ்வுக்கு உதவியது.
3. இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கான (கோல் இந்தியா) அமைச்சரவை முடிவு : இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கின. அவற்றின் ஊழியர்களுக்கும் 2007 ஜனவரி 1 முதல் கோல் இந்தியா (வ) அமல்படுத்திய ஊதிய மாற்றத்தை அனுமதித்ததற்கான அமைச்சரவை முடிவு இது.  மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். செயலாளர்களின் குழுவின் சிபார்சை ஏற்று14-10-2015ல் இந்த அமைச்சரவை முடிவு,     விதிக்கப்பட்ட அஃபர்டபிலிடி நிபந்தனைக்குச் சலுகை தந்தும், அதிகாரிகளுக்குப் பணித்திறனோடு இணைந்த ஊதியம் (PRP) வழங்கியதை அனுமதித்தும் ஒருமுறைச் சிறப்புச் சலுகையாக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நட்டமடையும் பிற நிறுவனங்கள் இதனை முன்னுதாரணமாக எடுத்துக்காட்ட முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.
4. DPE 3-8-2017: பிரத்யேகமான பணியை நிறைவேற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நிறுவனப்பட்டவை சில. அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு (அந்தச் சிறப்புப் பணிக்காக) வழங்கப்படும் மாற்றியமைக்கப்பட்ட ஈடு ஊதியம் (காம்பன்சேஷன்) அந்த நிறுவனங்களின் வருவாய் வகையின் பகுதியாக அமையும் (ஆனால் அது பட்ஜெட் ஆதரவு ஒதுக்கீடாகாது).  அந்த காம்பன்சேஷன் மாற்றி அமைக்கப்படும்போது, அஃபர்டபிலிடி நிபந்தனை அந்த நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனால் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்படும். (BSNL நிறுவனம் இந்தப் பிரிவின் கீழ் வராது என்பதை DPE தெளிவுபடுத்தி விட்டது, 
IV  BSNL க்கு 3-வது ஊதிய மாற்றம் பற்றிய அரசின் நிலை
மார்ச் 2018  Telecom DFG LS 47வது அறிக்கையிலிருந்து : *ஊதியச் சுமையைக் குறைக்க விரைவில் விருப்ப ஓய்வுத் திடட்த்தைப் பரிசீலனை செய்க. *சொந்தமான நிலங்களை வணிக ரீதியில் பயன்படுத்துக. திட்டுகளாக 15192 நிலங்கள் சொத்தாக உள்ளன, அதில் 70,524 கோடி மதிப்புள்ள 4030 நிலங்கள் கேந்திரமான இடங்களில் உள்ளன. 1057 கோடி வருவாய் மதிப்புள்ள 7 இடங்கள் DOT அனுமதிக்காகக் காத்திருப்பில் உள்ளன; காரணம், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட வேண்டும். *2007-08 முதல் 2016-17 வரை BSNL க்கு ரூ 13,028 கோடி அரசு மானிய நிதி உதவியாகக் கிடைத்துள்ளது.
    *மேலும் தேவைப்படும் உதவியைத் தனது புதிய திட்டங்களை நிறைவேற்ற BSNL ஐ நியமிப்பதன் மூலமாக அரசு தொடர்ந்து வழங்கலாம். *MTNL நிறுவனம் நலிவடையும் பொதுத்துறை என DPE  வழிகாட்டுதல்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது.  *MTNL ஐ மீட்டுருவாக்கம் செய்ய டெலாய்யிட் நிறுவன ஆலோசனை சேவை கோரப்பட்டுள்ளது. * ITI நிறுவனத்தை மீட்டுருவாக்கம் செய்யும் திட்ட வழிமுறையை MTNL நிறுவனத்திலும் பயன்படுத்த வேண்டுமெனவும், *விஆர்எஸ் மூலம் தாமதமின்றி 20சதவீத ஊழியர்கள் குறைக்கப்பட வேண்டுமெனவும் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.  அந்த அறிக்கையைப் பரிசீலித்தபின் MTNL அதனை DOT க்கு அனுப்பியுள்ளது.
2. NFTE சங்கத்திற்கு DPE 31-01-2018 தேதி கடிதம்:  அஃபர்டபிலிட்டி நிபந்தனையிலிருந்து விலக்கு கோரி 22-12-2017ல் பிரதமருக்குக் கடிதம் எழுதியது NFTEசங்கம்.  பிரதமர் அலுவலகம் மூலம் அந்தக் கடிதம் DPE-க்கு அனுப்பப்பட, DPE பதில் அனுப்பியது. அதில், ’8வது சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசின் முடிவின்படியே DPE 24-11-2017 கடிதத்தை எழுதியது. எனவே அதன்மீது எந்தவிதமான விலக்கு வழங்குவதாக இருந்தாலும், அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கட்டாயமாகத் தேவை. எனவே, DOTஐ அணுகி உங்கள் மனுவைப் பரிசீலனை செய்து அதன்படி உரிய முடிவு எடுக்கக் கோருங்கள். இந்தக் கடிதத்தின் நகல் திரு. பவன் குப்தா டைரக்டர், PSU 1 DOT க்கும் அனுப்பப்பட்டுள்ளது.’  இந்தத் தகவலுக்குப் பிறகும் அதிகாரி அல்லாத ஊழியருக்கு அஃபர்டபிலிட்டி நிபந்தனை பொருந்துவது பற்றியோ நிதிநிலைமை நிலைத்தன்மை பற்றியோ DOT எதுவும் கூறாமல் மௌனமாக இருக்கிறது.
3. DOT யின் 20-3-18 கடிதத்திற்கு DPE ஊதியப்பிரிவு 18-4-18 ல் எழுதிய பதில் கடிதம்
DPE வழிகாட்டுதல்படி, 3-8-17 கடிதத்தின் பாரா 5ல் வகைப்படுத்தப்பட்ட பிரிவின்கீழ் BSNL வரவில்லை.  3வது PRC  மீது அரசுச் செயலாளர்கள் கமிட்டி எடுத்த முடிவின்படி அஃபர்டபிலிட்டி நிபந்தனை முடிவு எடுக்கப்பட்டது.  எனவே அதன் மீது மாற்றம் அல்லது விலக்கு பற்றி எந்த அளவு வழிகாட்டவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தேவை.  அமைச்சரவை ஒப்புதலுக்கு DOT துறையே தங்கள் மட்டத்தில் பரிசீலிக்கவும், தேவையான மேல் நடவடிக்கை எடுக்கவும்வேண்டும்.
4. பாராளுமன்ற மக்களவை கேள்விக்கு 1-8-18 பதில்: BSNL கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் நட்டம் அடைவதால், DPEவழிகாட்டுதல்படி, அந்நிறுவனம் ’நலிவடையத் தொடங்கும் நிறுவனம்’ என அறிவிக்கப்பட்டது. எனவே அதன்படி, DOT துறை BSNL-ஐ மீட்டுருவாக்கம் செய்யும் திட்டத்தைத் தயாரிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
5. பாராளுமன்ற மக்களவை கேள்விக்கு 8-8-18 பதில்: 2014 முதல் 2017 வரை தொடர்ந்து நட்டமடைவதால் DPE 3-8-2017 கடிதத்தின்படி அஃபர்டபிலிட்டி நிபந்தனை BSNLக்குப் பொருந்தாது.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மற்றும் திட்ட முன்வைப்புகளின் அடிப்படையில் BSNL நிறுவன அதிகாரிகளுக்கு 3வது ஊதியமாற்றத்தை அமல்படுத்திட அஃபர்டபிலிட்டி அம்சத்தைத் தளர்த்துவது குறித்து DPE யிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
DPE 3-8-17 கடிதத்தின் பாரா 5ல், வகைப்படுத்தப்பட்ட பிரிவின்கீழ் BSNL வரவில்லை.  எனவே அதன் மீது மாற்றம் அல்லது விலக்கு எந்த அளவு கோரவும் வழிகாட்டவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தேவை.  அமைச்சரவை ஒப்புதலுக்கு DOT துறையே தங்கள் மட்டத்தில் பரிசீலிக்கவும், தேவையான மேல் நடவடிக்கை எடுக்கவும்வேண்டும். இந்தப் பிரச்சனை பரிசீலனையில் உள்ளதென DPE விளக்கம் அளித்துள்ளது.  (இந்தப் பதிலிலும் கூட ஊழியர்களுக்கு அஃபர்டபிலிட்டி அம்சம் பொருந்துமா என்பது குறித்து மௌனமாகவே உள்ளது.)
6. BSNL CMD-க்கு DOT கடிதம் 06-11-2018 :  கட்டுப்படியாகுமா என்ற அஃபர்டபிலிடி அம்சத்தைப் பொருத்த வரை 15 சதவீத பிட்மெட்டுடன் BSNL ல் ஊதிய உயர்வு அளிப்பதால் ஆண்டுக்கு ரூ4300 கோடி கூடுதல் நிதிச் சுமைத் தாக்கத்தை ஏற்படுத்தும். நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமை கூடுதல் சுமையைப் பிற வருவாய் ஆதார இனங்களின் உதவி இல்லாமல் ஏற்க இயலாத நிலையில் BSNL உள்ளது….
எனவே BSNL CMD அவர்கள் முழுமையான, விரிவான, வெளிப்படையான திட்டத்தைப் போதுமான தகவல்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் அவர்கள் பொருத்தமெனக் கருதும் கூடுதல் தகவல்களையும் சேர்த்து, இந்தத் துறை மேலும் அது குறித்து பரிசீலனை செய்ய வசதியாக, அறிக்கை அனுப்பவும்.
ஊழியர்களின் ஊதிய மாற்றக் கோரிக்கையின் தற்போதைய நிலை குறித்து
DOT துறையின் 07-01-2019 கடிதம்
அஃபர்டபிலிட்டி மற்றும் நிதிநிலைமையின் சாத்தியப்பாடு அம்சங்களை மனதில் கொண்டு ஊழியர்களுடன் பேச்சுநடத்த DPE 24-11-17 கடிதம் வழிகாட்டியது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதியமாற்றத்தைப் பொருத்த அளவு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் எட்டப்பட்ட உடன்பாட்டைச் சம்பந்தப்பட்ட அமைச்சக நிர்வாகத்திற்கு அனுப்பிடக் கோரப்பட்டுள்ளன. அந்த உடன்பாடு, வழிகாட்டு நெறிமுறைகளின் அளவுகோல்களுக்கு உட்பட்டதாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்த நடைமுறை. இந்தத் தகவல் BSNL-க்கு 27-4-18 லேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது BSNL நிர்வாகம்தான் தனது ஊழியர்களுக்கு ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 
V அனுபவங்களும் மீளும் வழியும்
1. கோல் இந்தியாவின் நட்டமடையும் துணை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு 2007 ஊதியமாற்றம் 8 ஆண்டுகள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமாயிற்று.  அதன் பின்புலம் வேறு.  ஆனால், பின்பற்றிய வழிமுறை துணை நிறுவனங்கள் அனைத்தையும், உரிய விலக்கு பெற்று, PBT கணக்கீட்டிற்காக ஒரே அலகாக எடுத்துக் கொள்ள வைத்தார்கள்.
ஆனால் டெலிகாம் ஒரே அலகு (யூனிட்) அல்ல. (இதில் MTNL, BSNL, TCIL, BBNL, IIT முதலிய நிறுவனங்கள் உள்ளன. இதில் TCIL 15 சதத்துடன் ஊதிய மாற்றம் பெற்றுவிட்டது.)  2014 தேர்தல் ஆண்டாக இருந்த போதும் அவர்கள் ஊதியமாற்றத்தை அந்த ஆண்டு பெறவில்லை: 2015ல் தான் பெற்றார்கள். நம்முடைய வீரம்செறிந்த போராட்டங்களும் திறன் மிகுந்த வாதத்திறமையும் அதைவிட சிறந்த ஊதியமாற்றத்தைப் பெற்றுத்தரக் கூடும் என ஒருவர் உரத்துக் கூறலாம். ஆனால் வெறும் அவசரம் மட்டுமே போதாது.  அதற்கான போராட்டம் என்பது நீண்ட நெடிய ஒன்றாகக் கூடுமெனத் தோன்றுகிறது. போராட்ட வீரர்களின் மிகக் குறைந்த ஆற்றலைச் செலவிட்டு, ஆகப் பெரிய வெற்றியை ஈட்டுவது; இதுவே, பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் திசைவழிப் பாதையாக இருக்க முடியும்.  அதுவே இயக்கத்தை நிலைநிறுத்தும், வேகம் குறையாது உணர்வூட்டும்.
 2. அதிகாரிகளுக்கு ஊதியமாற்றம் செய்ய BSNL அனுப்பிய திட்ட அறிக்கை மீது DOT கடிதப் போக்குவரத்து நடத்துகிறது.  சில ஐயப்பாடுகளை எழுப்பி கூடுதல் விவரங்களுடன் மேலும் தெளிவாகத் திட்டஅறிக்கை தயாரித்து அனுப்பினால் ஊதியமாற்றம் இயல்பான தர்க்கமுடிவை எட்டுமென DOT ஆலோசனை கூறியுள்ளது.
ஆனால் ஊழியர்களின் ஊதியமாற்றத்தில் பொதுவாகத் தான் பரிசீலிக்க வசதியாக சம்பந்தப்பட்ட அனைவரும் ஓர் ஒத்த முடிவிற்கு வருமாறு அறிவுரை கூறுவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு. விலகி தூரத்திலேயே நிற்கிறது; கையை விரிக்கிறது DOT.  இதன் பொருள் யாதெனின், DOT தனது மேஜைமுன் ஊழியர்களின் ஊதியமாற்றம் குறித்த எந்த வரைவுத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. எனவே மேல்நடவடிக்கைக்காகக் குடியரசுத் தலைவர் உத்தரவான PO உத்தரவோ அல்லது திட்டத்தை அமைச்சரவை முன் ஒப்புதலுக்கு வைக்கவோ இயலாத நிலையில் உள்ளோம் என்பதுதான்.
ஆனால் DOTஇலாக்கா நேர்மையற்று நடத்து கொள்கிறது. ஊழியர்களின் ஊதியமாற்றத்தில் அஃபர்டபிலிட்டி அம்சம் குறித்து BSNL நிர்வாகத்திற்கு முறையாக வழிகாட்டுதல்கள் தரவில்லை என்பதே உண்மை.
15 சத உயர்வுடன் உடன்பாடு எட்டப்பட்டு குடியரசுத் தலைவர் உத்தரவுக்காக DOTக்கு அனுப்பினோமென வாதத்திற்காக வைத்துக்கொள்வோம். அப்போது, அதிகாரிகளுக்கான ஊதியமாற்றம் அமைச்சரவை ஒப்புதலுக்கான குறிப்பு (நோட்) தயாரிப்பு மற்றும் ஒப்புதல் நிலுவையில் இருக்கும் நிலையில், நமது உடன்பாட்டிற்கு ஒப்புதல் தந்து PO வெளியிட்டுவிடுமா?
3. DPE 03-08-17ல் அதிகாரிகளுக்கான நிபந்தனைத் தளர்வு கடிதம். அந்தக் கடிதம் மட்டுமே ஊழியர்களின் ஊதியமாற்றத்திற்னான PO வெளியிடப் போதுமானது இல்லையா என்பதை ஒருவர் விளக்க வேண்டும்.  (நவம்பர் 24, 2017 நிபந்தனைகளில்) எந்த நிபந்தனைத் தளர்வுக்கும் அமைச்சரவையின் அனுமதி அவசியம் என்று NFTE சங்கத்திற்கு DPE அனுப்பிய கடிதத்தில் எழுதியதற்கு அர்த்தமே இல்லையா?
    ஊழியர்களின் ஊதிய மாற்றக்குழுக் கூட்டத்தின் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை குறிப்புகளின் மூலமே இந்தப் பிரச்சனை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.  ஊழியர் சங்கங்கங்கள் தங்களுக்கான எந்த உடன்பாடும் -- அதிகாரிகளுக்கான ஊதியமாற்றத் திட்டத்தை DOT/அமைச்சரவை ஒப்புதல் தந்து ஏற்கும் வரை -- எட்டப்படுவது சாத்தியமில்லை அல்லது பலன் தராது என்று கருதினால், தங்கள் உறுப்பினர்களுக்கு அது குறித்து விளக்க வேண்டும்.  DOT யின் ஏமாற்று வித்தைகளை, இரட்டை வேட நிலைபாட்டை நுட்பமான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த வேண்டும். வீட்டு வாடகை பிரச்சனை என்பது, ஊதியமாற்றத்தை ஒப்பிட அதனிலிருந்து விலகி நிற்கும் ஒரு சிறு பிரச்சனையே.
4. ஊதிய மாற்றத்திற்கு நிபந்தனைத் தளர்வு வழங்கிய பிறகு 15%  / 10% / 5% என்ற ஃபிட்மெண்டில் பொருத்தும் போது செலவுக் கணக்கீடு எதன் அடிப்படையில் இருக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
 5. BSNL மீட்டுருவாக்கம் /மறுசீரமைப்புத் திட்டம் எதனோடும், ஊதியமாற்றம் இணைக்கப்படுமா என்பதற்கும் தெளிவு தேவை.  நாளாது தேதிவரை ஒப்புக்கொள்ளப்பட்ட அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என ஊதியப் பேச்சுவார்த்தைக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் IIM மேலாண்மை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனையை DOTதெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
6.  நட்டம் அடையும் நிறுவனங்கள் குறித்துத் தீவிர அக்கறை இருக்குமானால், மத்திய சங்கங்கள் தீர்வை நோக்கிய முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  நட்டத்தில் உள்ள நிறுவனங்களின் அனைத்துத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, அவர்கள் பிரச்சனை குறித்து அரசைப் பேச்சுவார்த்தை நடத்த நெருக்கடி தரும் வகையில் இயக்கம் காண்பதே மத்திய சங்கங்களின் முதற் கடமையாக இருக்க முடியும்.
7.  நட்டத்திலுள்ள நிறுவனங்களிலும், வருவாய் திரட்டும் ஆதாரவளம் இருப்பின், அந்த நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியமாற்றம் தர அனுமதிக்கலாம் என்ற முந்தைய வழிகாட்டுதல் அம்சத்தை மீண்டும் சேர்க்க வேண்டுமெனக் கோரிக்கை எழுப்பலாம்.  இந்த ஒரு கோரிக்கை, நட்டத்திலுள்ள அனைத்து70 நிறுவனங்களிலும் 2017 புதிய ஊதிய விகிதத்தை அமலாக்க உதவும்.  லாபம் ஈட்டுவதோ அல்லது நட்டமடைவதோ பல்வேறு நிறுவனங்கள் 2017, 2007, 1997 ஆகிய வேறுவேறு ஊதிய விகிதங்களில் ஏன் இருக்க வேண்டும்? வேறுபட்ட ஊதியவிகிதம் ஒவ்வொன்றிற்கும் வேறுவேறு வித்தியாசமான IDA உத்தரவுகளை DPE ஏன் பிறப்பிக்க வேண்டும்?
  2017 புதிய ஊதியவிகிதத்தை அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் அமலாக்குவதால் நிதியாதார நிலைத்தன்மை தொடர்ந்து பேணப்படுவதில் என்ன பிரச்சனை? அந்த மாற்றம் என்பது பழைய விகிதத்திலிருந்து புதிய விகிதத்திற்கு, புதிய IDAவுடன் மாறுவது என்பது தான். இந்தக் கோரிக்கையினால் புதிய ஊதியவிகிதங்கள் கொண்டுவரப்படும் போது ஊதியமாற்றக்குழுவின் முடிவை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் அமலாக்குவது எளிதாகும்.
 ஒரே தேதியில் IDA இணைப்பு என்பது ஊதிய உயர்வு ஆகாது : அது ஒன்றுக்குள் ஒன்றாக உட்படுத்துவதுதான் (subsumption). (அதாவது, அடிப்படை ஊதியமும் IDAவும் ஒன்றுக்குள் ஒன்றாவது)  அது 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயித்த ஊதியத்தின் உண்மை மதிப்பில், இன்றைக்கு விலைவாசி உயர்வால் ஏற்பட்ட மதிப்புச் சரிவை, சரி செய்யும் ஒரு முயற்சியே. மாறாக, ஃபிட்மெண்ட் என்பது ஊதிய உயர்வு.  தரப்படுத்தப்பட்ட படிநிலை ஃபிட்மெண்ட் (Graded fitment) என்பது புரிந்து கொள்ளக் கூடியது.  ஆனால் புதிய ஊதிய விகித மறுப்பு என்பது பாரபட்சம், பாகுபாடு .
சாராம்சத்தில் 3வது ஊதியமாற்றக் குழுவிற்கு DPE-யின் வழிகாட்டுதலில் வலியுறுத்திக் கோரப்பட வேண்டிய மாற்றம் இதுதான்: ”நட்டமடையும் நிறுவனங்கள் உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் PBT-படி 2017 புதிய ஊதியவிகிதத்திற்குப் படிநிலை ஃபிட்மெண்ட்டுடன் மாறுவதை அனுமதிக்க வேண்டும்”.  இந்த ஒரு மாறுதல் ஒப்புக்கொள்ளப் பட்டால் அது, அஃபர்டபிலிட்டி நிபந்தனையை ஒரேயடியாக விலக்கிக் கொள்ளும் வரை, அனைவருக்கும் நன்மை தரும் தீர்வாக அமையும்.  இது ஒரு வகையில் 2007 அல்லது 1997 ஊதிய விகிதத்தில் இருப்பதைவிட மேம்பட்ட நிலை ஆகும்.   ஆளும் வட்டாரம் நட்டமடையும் நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்குவதற்கு ஆதரவாக இல்லை. இந்நிலையில், நம்முடைய போராட்டப் பாதை நீண்ட நெடியதாக இருக்கக் கூடும். அந்தப் போராட்டங்கள்தான் தற்போதைய வழிகாட்டு நெறிகளில் அரசை மாற்றம் கொண்டுவரச் செய்யும் அல்லது நமது நிறுவனத்திற்கு ஒருமுறை நிபந்தனைத் தளர்வு விலக்கை நாம் கோரத்தான் வேண்டும்.
ஆங்கிலக் கட்டுரை பதிவு செய்த நாள் 21-01-19
தமிழாக்கம் வெ. நீலகண்டன், கடலூர்,

No comments:

Post a Comment