Monday, February 18, 2019

பிஎஸ்என்எல் ஸ்டிரைக்: காரணமும் விளைவுகளும்!

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சந்தித்துவரும் பிரச்சினைகள் என்ன?

இனியன்
பிஎஸ்என்எல் ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் தொடங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை வழங்குதல், மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துதல் செல் கோபுரங்களின் பராமரிப்பைத் தனியாருக்கு அளிப்பதை எதிர்த்தல் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளோடு மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமாக அமையும் என்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (AUAB) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவந்த நிலையில், இரண்டு மாதங்கள் முன்பே காலவரையற்ற போராட்டமாக அறிவித்து, பின்னர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் நடத்தும் திட்டம் கைவிடப்பட்டது. ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏதும் தென்படாத நிலையில் தற்போது இந்த மாத 11,13 தேதிகளில் நடந்த அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. முடிவுகள் எட்டப்படாத நிலையில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிற்சங்க இணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, “பிஎஸ்என்எல் காஷ்மீரின் மோசமான பள்ளத்தாக்குகளில், பல மலைப் பிரதேங்களில் இருக்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டும்தான். கேரள வெள்ளத்தில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இயங்கமுடியாத குழலில் தொடர்ந்து நான்கு நாட்கள் சேவை அளித்ததை அரசு உட்பட பலரும் பாராட்டினார்கள். கடந்த வருடங்களில் நிகழ்ந்த சென்னை வெள்ளத்தின் போதும் பிஎஸ்என்எல் மட்டும்தான் அயராது வேலை செய்தது. ஒரு பொதுத் துறை நிறுவனம் சேவை அளிப்பதுதான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். லாப நஷ்டம் பார்க்கக் கூடாது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை வரவேண்டிய ஊதிய மாற்றம் 2007க்குப் பின்னர் கடந்த 1.1.2017 இல் அமல்படுத்தவில்லை. இதற்கு பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டமடைவதால்தான் இந்த நிலை என்று தெரிவிக்கப்படுகிறது எந்த விதத்தில் நியாயம்?” என்றார்.
பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இருப்பது உண்மையா என்று அவரிடம் கேட்டதற்கு, “தனியாரோடு நாங்கள் போட்டி போட வேண்டும் என்றால் முதலில் அந்தப் போட்டி சமமான இடத்திலிருந்து தொடங்க வேண்டும். ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்களால் வங்கிகளிடம் கடன் வாங்க முடியும். அவை வங்கிகளுக்கு தர வேண்டிய கடன் பாக்கியும் நிறையவே உள்ளது. ஆனால், பிஎஸ்என்எல் வங்கிகளிடம் கடன் வாங்க முடியாது. பொதுத் துறை நிறுவனத்துக்கு அதற்கு அனுமதியில்லை” என்று சொன்னவர், மேலும் இதிலுள்ள சிக்கல்களை விளக்கினார்.
“பிஎஸ்என்எல்லுக்குச் சொந்தமான இடங்களைத் திறம்பட பயன்படுத்திக் குத்தகைக்கு விடுதல் போன்றவற்றைச் செய்தாலே வருடத்துக்கு 7,000 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், இந்தத் திட்டத்துக்குத் தொலைத்தொடர்புத் துறை இப்போது வரை அனுமதி தரவில்லை. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதுதான் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு. ஆனால், அது முதலில் ரிலையன்ஸுக்குத் தான் வழங்கப்பட்டது. இன்றுவரை பிஎஸ்என்எல்லுக்கு ஒதுக்கப்படவில்லை. எந்த உதவியும் கிடைக்காமல் எல்லாவற்றையும் தனியாருக்கு தந்துவிட்டு நஷ்டமடைகிறது என்றால் அது எப்படி சரியாகும்” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.
கடந்த காலங்களில் பிஎஸ்என்எல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் தொய்வைச் சந்தித்துவந்த நிலையில் அந்தத் தொய்வுக்குக் காரணம் அரசின் கொள்கைகள்தான் என்று தெரிவிக்கிறார்கள் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தோர். பிஎஸ்என்எல்லைப் பொறுத்தவரை (என்எஃப்டிஈ) தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் (BSNL EU) ஆகிய இரண்டு சங்கங்களும் தேர்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள். இது தவிர்த்து அதிகாரிகளுக்கான SNEAவும் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. AIBSNL EA போன்ற அங்கீகரிக்கப்படாத எட்டுக்கும் மேற்பட்ட சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் ஆளும்கட்சியின் தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை.
மூன்று நாட்கள் போராட்டத்தால் பிஎஸ்என்எல்லைப் பயன்படுத்திவரும் லட்சக்கணக்கான பயனாளிகள், வங்கிகள், ஏடிஎம் சேவைகள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)

No comments:

Post a Comment