Saturday, April 13, 2019

ஜாலியன் வாலாபாக் 100-வது ஆண்டு நினைவு தினம்


எதற்கு சுதந்திரம் ? 
ஏன் சுதந்திரம் ?

  என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் கேள்விக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளை கேட்பதற்கே ஒரு சுதந்திரம் வேண்டும் அல்லவா ? அதற்குதான் ரத்தத்தை சிந்தி முன்னோர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தார்கள். அப்படி சுதந்திர வரலாற்றில் இன்னும் ரத்தக்கரை மறையாமல் இருக்கும் சம்பவம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள். சுதந்திரம் எனும் வேள்வி கொழுந்துவிட்டு எரிய காரணமாக இருந்த, இந்தக் கோர சம்பவத்தின் 99 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 -இல் ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் பீரங்கி, துப்பாக்கி சூட்டு நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவை சுடப்பட்டன. பிரிட்டன் அரசின் கணக்குப்படி மொத்தம் 379 பேர் இந்த கோர துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். ஆனாலும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வு குறித்து பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரிட்டன் ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட உந்துதலை எழுச்சியை ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் கடையடைப்பு நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர் மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.

ஏப்ரல் 13, 1919 அன்றுதான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் ராணுவ ஜெனரல் டையர் என்பவன் 100 வெள்ளையினர் படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான். திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயப்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது. பஞ்சாபின் துணை ஆளுநர் சேர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டையரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" என டையருக்குத் தந்தி அனுப்பினார்.

பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது "நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.  

                 
இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார். இப்போதும் ஜாலியன்வாலா பாக்கில் படுகொலை நடந்த இடத்தில், குண்டுகள் துளைக்கப்பட்ட சுவர்களை பார்கக்லாம், ரத்த கரைகளும் தென்படும். இப்போது பிரிவினைவாதம் பேசும் பலருக்கும், இந்த தியாகத்தின் அர்த்தம் தெரியாது.  ஏப்ரல் 19, 2019 ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100 ஆவது நினைவு தினம், இதுவும் ஒரு தினம் என்று கடந்துவிடாமல் உயிர்நீத்த மக்களுக்கு நினைவுகள் மூலம் உயிர்கொடுப்போம்




#புதியதலைமுறை_பகிர்வு

No comments:

Post a Comment