மக்கள் சேவையில் BSNL
மாலை நான்கு மணிக்குத்தான் வீடுவந்து சேர்ந்தேன். கணினியைத் திறந்து, முகநூலில், தமிழ்நதி தம் வீடுபற்றி எழுதிய பதிவொன்றை வாசித்தேன். அவ்வளவுதான். நெட்ஒர்க் கைவிட்டது.நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆகையால் BSNL அலுவலகத்திற்கு உடன்தானே ஓடினேன், AE ஓர் அம்மையார். கனிவானவர். உடனே கனிந்தார். யாரோடோ தொலைபேசினார். எனக்குச் சொன்னார், “உங்க ஏரியாவுல இருந்து இப்பத்தான் வந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறார். நீங்க போங்க! நான் அனுப்பி வைக்கிறேன்.”
எனக்கு சங்கடமாக இருந்தது. மதியச் சாப்பாட்டை மாலை ஐந்துமணிக்குச் சாப்பிடுகிற ஓர் ஊழியன்!
சம்பளமும் சரியாகத் தராமல் BSNL-ஐ ஒழித்து தனியார்க்கு ஒப்படைக்கக் காய்நகர்த்துகிற ஓர் அரசாங்கம். அப்படியும் கடமை சுணங்காத அரசு ஊழியர்கள்!
எனக்கு BSNL; எங்கள் பாப்பாவிற்கு (அதாவது டாக்டரம்மா வீட்டில்) AIRTEL. இரண்டிற்கும், ஒரு பிரச்சனை என்றால், நான்தான் அலைவேன்.
சத்தியம் இது: ஒப்பிட, BSNL சேவையே உயர்ந்ததாய்க் காண்கிறேன்.
“யாரு, மேடம், டெக்னீஷியன்?”
“ஹரிக்கிருஷ்ணன்.”
“எனக்கு அவரைத் தெரியுமே! கீழே போய்ப் பார்த்துட்டுப் போறேன்.”
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு டீக்கடையில் அவரைப் பார்த்தேன். தெரிந்தமுகம், ஆனால் யாரென்று தெளியவில்லை.
“ஸார், என்னை ஞாபகம் இல்லையா?”
“வேலையுதம்தானே? அந்தப் பெட்ரோல் பங்க்ல...”
“இல்லை, ஸார், ஹரிகிருஷ்ணன். BSNL. உங்க வீட்டுல ப்ராடுபாண்ட் எல்லாம் நல்லா வேலை செய்யுதுதானே?”
கீழிறங்கி அவரைச் சந்தித்தேன்.
“வீட்ல போயி இருங்க, ஸார். உடனே வர்றேன்.”
வந்தார்; வேலையை முடித்துத் தந்தார். விடைபெறும்போது, “இவ்வளவு புத்தகம் வெச்சிருக்கீங்களே, நீங்க...?”
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சங்கடப்பட்டேன்.
“எழுத்தாளரா?”
அடுத்து, குமுதம் ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிங்களா என்று கேட்டுவிடுவாரோ என்று மேலும் சங்கடப்பட்டேன்.
“ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா, ஸார்?”
“ஆமா, நாவல் மாதிரி ஒன்னு; அப்புறம் கவிதைப் புத்தகம் ஒன்னு.”
“நான் வண்ணநிலவன்லாம் படிச்சிருக்கேன், ஸார். அதைவிட்டு விலகி இப்படி வந்து வேலையில சிக்கி... நாளைக்கு லீவுங்கிறதால இன்னிக்கு அஞ்சு மணிக்கெல்லாம் போகமாட்டேன் ஸார். ஒரு பிரச்சனைன்னு வந்தா படிக்கிற புள்ளைங்க, பாவம், என்ன பண்ணுவாங்க? அதனால லேட்டாத்தான் போவேன்.”
இவ்வளவும் என்வீட்டு வாசற்படியில். அவரை இழுத்து அணைத்தேன். அது வண்ணநிலவனுக்காக என்று அவர் அறிய வாய்ப்பில்லை.
“உங்க கவிதைப் புத்தகம் எங்கே கிடைக்கும், ஸார்?”
அவரை வீட்டுக்குள் இழுத்து, “தாய்வீடு” ஒரு பிரதியை எடுத்து,
ஹரிகிருஷ்ணனுக்கு
அன்புடன்
ராஜசுந்தரராஜன்
என்று கையொப்பமிட்டுத் தந்தேன்.
No comments:
Post a Comment